திரைப்பட இயக்குனர் மாரிசெல்வராஜ் அவர்களின் படைப்பில் வெளிவந்துள்ள மூன்று திரைக்கதையில் ஊடாடும் பெண் கதாப்பாத்திரங்களை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத முடிகின்றது. ஏனெனில் ஒவ்வொன்றும் வேறொரு கோணத்தை அக்கதாப்பாத்திரத்தின் வழி வெளிப்படுத்துகிறதை காண முடியும். அவை, இந்த சாதிய சமூகத்தின் பிம்பத்தை தோலுரித்துக் காட்டுகிறது. நடிகையின் அழுகுரல் ஒருபுறம் சத்தமாக ஒலிக்கிறது; மறுபுறம் மௌனமாக கடந்து சென்று விடுகிறது. மக்கள் மத்தியில் இவ்விரண்டுமே உச்சம் பெறுகிறது. இவை எவ்வாறெல்லாம் கடந்து செல்கிறது என்பதை மேற்சொன்ன திரைப்படத்தில் இரண்டில் நேரடியாக ஜோதி மஹாலெட்சுமி வாழ்வியலில் எவ்வாறு பரிணமிக்கிறாள் என்பதை விரிவாக இக்கட்டுரையில் பார்க்கலாம்.
இந்த கதாபாத்திரம் முழுவதும் கற்பனையாக புனையப்பட்டது தேவதைகள் கற்பனையின் உச்சத்தின் வெளிபாடு எனலாம். நிஜத்தில் இம்மாதிரியான தேவதைகள் படைக்கப்படுவதில்லை என்பது நிதர்சனம்.
| Picture courtesy : The News Minute |
பரியேறும் பெருமாள் ஜோதி மகாலெட்சுமி
தமிழ்நாடு, முழுவதும் சாதியத்தால் நிறைந்தது. அந்த சாதியம் பெண்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு பின்பற்றப்படுகிறது என்பதை உள்ளூர்களில் நன்கு காணலாம். சேரியை விட ஊர்த் தெருவில் அதன் வார்ப்பு கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது போலும். சமூகநீதி மண்ணில் சாதி இல்லை என்பதே ஆகச்சிறந்த பொய்.
![]() |
| Pariyerum Perumal is available on Amazon Prime Video |
தமிழ் சாதிய சமூகத்தில் ஒரு பெண் உயர்கல்வி பயில வருவதே ஆக சிறந்த ஒன்று என்று கருதுகின்ற சூழலே தற்போதும் நிகழ்கிறது. ஆகையால், பெண் கல்வி பயில வருவதை இன்னும் பெரிய முன்னேற்றம் என்று உரையாட அழைக்கிறது. அது அத்தியாவசியம் என்ற நிலைக்கு வரவில்லை என்பதை உணர்த்துகிறது. ஒரு பெண் தனக்கு விருப்பமான ஒன்றை இங்கு செய்வது என்பது யானையின் மயிரை கொண்டு வண்ணக்குடை முனைவது போன்றது. இப்படியான சூழலில் ஒரு பெண் சட்டம் பயின்று வழக்கறிஞர் ஆகுவது எத்தகைய சுமையானது என்பதை எண்ணிக் கொள்ளுங்கள். வீட்டின் அடுப்படியில் மட்டுமே இருந்து வேலை செய்து கொண்டிருக்கின்ற பெண்களை பொதுவெளியில் இந்த சமூகம் எப்படி எண்ணும் என்பதற்கு உதாரணமாக, வீட்டில் நித்தம் வேலைக்கு சென்றுவிட்டு குடித்துவிட்டு வரும் தந்தையை ஏன் இப்படி குடித்து உடலை வருத்தி கொள்கிறாய் என்று எதிர்கேள்வி அக்கறையின் வெளிப்பாடாய் வந்த போதிலும் அவள் மீது இயல்பாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு சரியான வாயாடி என்பதே அவளுக்கு வழங்கும் பட்டமாக இருக்கும்.
இந்த சூழலில் ஜோதி மகாலெட்சுமி போன்ற பெண்கள் வழக்கறிஞர் ஆகுவதற்கு சட்டம் பயின்றால் எப்படியெல்லாம் இந்த சமூகம் பேசும் என்பதனை மனதில் எண்ணிக்கொள்வோம். இத்தகைய காலத்தில் சட்டக்கல்லூரி வந்த ஜோதியைப் பற்றியும் அவளின் வாழ்க்கை எப்படி கட்டமைக்கப்படுகிறது என்பதை பின்வருமாறு காணலாம்.
வழக்கமாக, தமிழ் சினிமாக்களில் நடிகர்களின் கதாப்பாத்திரங்கள் மீது பெருமளவில் இயக்குனர் கவனம் குவித்து திரைக்கதையை விவரிப்பார். அல்லது அந்த கதாப்பாத்திரமே எல்லாமுமாக தன்னை முன்னிறுத்தும் வகையில் படைக்கப்படும். இப்படியான சூழலில் சமீபத்தில் தயாரிக்கப்படுகின்ற சினிமாக்களில் பெண்களை மையமாக வைத்து கதாப்பாத்திரங்கள் அமைக்கப்பட்டு வருவது சிறப்புக்குரியது. இப்படி திரைக்கு வந்த கதாப்பாத்திரத்தில் பரியேறும் பெருமாள் மற்றும் மாமன்னன் ஆகிய இரண்டு சினிமாவில் ஒரே பெயர் கொண்ட வெவ்வேறு கதாப்பாத்திரம் எவ்வாறு இந்த சமூக சூழலில் தன்னை பரிணமிக்க முடியும். அவர்களுக்கான பங்கு எம்மாதிரியானது என்பவற்றை விளக்குகிறார் இயக்குனர் மாரி செல்வராஜ்.
பரியேறும் பெருமாள் திரைக்காவியத்தில் ஜோதி மஹாலெட்சுமி
தமிழ் மொழியில் இயக்கப்பட்ட சினிமாக்களில் இத்திரைப்படம் யதார்த்த சினிமாவாக துவங்கி வெகுஜன மக்களின் செல்வாக்கையும் வரவேற்பையும் பெற்றதோடு ஆரோக்கியமானதொரு விவாதத்தை நோக்கியும் நகர்த்தியது எனலாம். பரியனின் பிரியமான தோழியான ஜோதி மஹாலெட்சுமி தன்னுடைய வெகுளியான மனநிலையோடு சட்டக்கல்லூரிக்கு வருகிறாள். ஆனால், இவளின் கனவிலும், நிஜவாழ்விலும் ஒன்றாக இருப்பதை தன்னுடைய உள்மன தேடலிலேயே கடந்து செல்வதையே இத்திரைப்படத்தில் காண முடிந்தது. ஆதிக்க சமூகத்தில் பிறந்த ஒரு பெண் எவ்வாறு எத்தகைய சூழலையும் தாங்கிக் கொள்ளும் மனநிலையோடு வருவதாக காண்பிக்கப்படுகிறது அல்லது கட்டமைக்கப்படுகிறது.
கற்பனை கதாபாத்திரத்திற்கு எப்பொழுதும் இந்த சமூகத்தில் மதிப்பும் எதிர்பார்ப்பும் அதிகமாகவே வழங்கப்படும். அப்படியாக உருவாக்கப்பட்டதே ஜோதி மஹாலெட்சுமி. வெள்ளந்தியான முகபாவனை, மக்களின் மனதை வசீகரிக்கும் பார்வை, தனக்கு அநீதி நடக்கும்போது வெகுண்டெழும் மனதைரியம் உடையவள். கல்வியை தான் கற்றதை விட இருளடைந்த பகுதியில் வெளிச்சம் பாய்ச்சிட பாபாசாகேப்-ன் முக்கிய கருதுகோளான கற்பி என்பதை தன்னுடைய இயல்பான குணத்தில் வெளிப்படுத்தும் தன்மை உடையவள். தன் விருப்பத்தை வெளிப்படையாக சொல்லுகின்ற அளவிற்கு இயல்பானவள். யதார்த்தத்தில் இருந்து முற்றிலும் மாறுபடும் இவள் தன்னை நேர்மையான ஒருவராக இந்த சமூகத்தின் முன் வெளிப்படுபவள் மஹாலெட்சுமி.
கல்லூரி பயணத்தின் போது தொடர்ந்து இயற்கையின் அன்புக்கு தன்னை ஒப்புக்கொண்டு பேருந்தின் சன்னலோர இருக்கையில் அவள் செய்கின்ற சுவாசம் சமத்துவமானது. யாருக்கும் வஞ்சகம் செய்யாமல் பற்றி பரவி வீசும் காற்றில் நனைந்து செல்லும் இந்த தேவதை பரியனுக்குள் வர எண்ணி சமூக உரையாடலை துவங்கிட ஜோவை பரியனின் கரங்களில் அள்ளிக் கொடுத்து இருக்கலாம். ஆனால், அப்படியொன்றும் கொடுத்து விட சாதியும் அதன் இறுக்கமும் விடுவதில்லை என்பதே யதார்த்தம். இங்கு யதார்த்தம் மீறப்படவில்லை என்பது படைப்பாளர் தான் படைத்த கதாப்பாத்திரத்திற்கு நம்பகமாக இருந்துள்ளார் என்பதை அறியமுடிகிறது.
தான் ஒருவரை நேசிக்கிறேன் என்பதை தன்னுடைய சக தோழியிடம் அல்லது உறவுக்கார பெண்ணிடம் அறிமுகம் செய்யும் பக்குவம் கொண்டவள், தன்னோடு பரியனின் உரிமை எந்த அளவிற்கு இருக்கின்றது என்பதை சக தோழி காண்பதையும் எண்ணி மகிழ்பவளாக இருக்கிறாள்.
ஜோ பரியனுடன் அறிமுகமானது முதல் தன்னுடைய இயல்பை புதிதாக கட்டமைக்க விரும்பாமல் தன்னுடைய நிலையிலேயே இருந்து பழகுவது கவனிக்க வேண்டியது. ஒரு பெண் தன்னுடைய விருப்பத்தில் இருந்து எப்படியெல்லாம் தன்னுடைய இயல்பை வெளிப்படுத்த முடியும் என்பதை வரம்பு மீறலாக கொண்டு வலம் வருபவள்.
உடன் பிறந்த/நெருங்கிய உறவுடைய அண்ணனுக்கும் பரியனுக்கும் இடையே நடைபெறும் சண்டை மற்றும் மோதலின் போது தன்னுடைய உறவுக்காரன் செய்வது தவறு என்றறிந்து வீட்டில் போய் தன்னுடைய அப்பாவிடம் புகார் அளிக்கும் ஜோ. பரியனிடம் பிரச்சனைக்கான காரணத்தை நேரடியாக தெரிந்து கொள்ள வேண்டும் என்று நம்பி சென்று விவாதம் செய்து மனக்கவலை அடைகிறாள். இந்நிலையில் பரியனின் நிலையறிந்து வருந்துவதே அவள் வெளிப்படுத்தும் அன்பு. தன்னுடைய தோழன் அவமானபடுத்தப்படுகின்ற சூழலை அருகிருந்து பார்க்கும் ஜோ-வால் அதற்கான பின்னணியை புரிந்து கொள்ள முடியாமல் தவிப்பது சாதிய முரணை அவை வெளிக்கொணரும் இத்தகைய நிலையை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்துகிறது. ஆனால், யதார்த்தத்தில் சாதியை புரிந்துகொள்ளாமல் ஒரு பெண் இருக்கிறாள் என்பது வியப்பு ஏனெனில் இந்த சமூகத்தில் அனைத்து சடங்கு, சம்பிரதாயம் என யாவும் பெண் மீது சாதிக்கொரு பண்பு என்ற வகையில் கையளிக்கப்படுகிறது. இங்கு இயக்குனர் யதார்த்தத்தை மீறுகிறார் அல்லது இப்படியான சூழலில் தான் பெண்கள் வளர்க்கப்படுகிறார்களா? என்ற கேள்வியோடு அதை நாம் அணுக இடமளிக்கிறார் என்றும் கொள்ளலாம்.
சாதிய அடுக்கில் தங்களுடைய குடும்ப பின்னணி இத்தகையது. இந்த நிலையை கடக்கவும், விட்டு கொடுத்து சமநிலைக்கு வரவும் முடியாமல் தவிக்கிறாள் என்ற சிந்தனைக்கு எடுத்த செல்ல முடியாத, இதன் மீது கேள்வி ஏதும் நெருக்கடி இன்றி கடந்து செல்லக் கூடியது என்ற தன்மையில் மழுங்கடிக்கப்படுகிறது. மனுதர்மத்தின் கீழ் பெண்களுக்கான நிலையானது விளிம்பு நிலை மக்களின் நிலைக்கு ஒப்பானது என்று கருத இடமிருக்கிறது. அதனை பெரும் சமூகம் கேள்வி எழுப்ப தயங்குவதோடு அப்படியே கடந்து செல்கிறது.
தான் பரியனோடு நெருங்கி பழகுவதன் காரணமே, இந்த சாதிய சமூகத்திற்கு ஒவ்வாமையை தருகிறது. இந்த வெறுப்பு நிலையே இப்படியான மோதலுக்கு காரணம் என அறியாமல் இருக்கிறாள் ஜோ. சமூகத்தில் இருக்கின்ற சாதிய முரண்களை கட்டமைப்பில் உயர்வு தாழ்வு என்ற நிலை இருப்பதையும், அதனால் தான் துன்பம் அனுபவிக்கவில்லை என்ற போது அவர்களுக்கு இதன் தாக்கம் கிடைப்பதில்லை என்பதை விட அதனை உணர முடியாத சூழலே இங்கு நிலவுகிறது என்ற புரிதலுக்கு தள்ளுகிறார் இயக்குனர். இயல்பில் பள்ளி, கல்லூரி பயிலுகின்ற பெண்களிடம் இது குறித்து எந்தவொரு விவாதமும் பெரிதாக நடக்கவில்லை. ஏனென்றால், இதனை அவர்களுடைய பிரச்சனை என்று கருதாது இருப்பதன் மூலம் அதனை வழக்கம் போல கடந்து சென்றனர்.
பரியனுக்காக வாழ வேண்டும் என்பதை கடந்து பரியனின் குடும்ப உறவுகளோடு சேர்ந்து வாழ வேண்டும் என்பதனை பெரும் பாக்கியமாக கருதுபவளாக எண்ணுகின்றாள். பரியனின் குடும்ப நலனில் அக்கறை கொண்ட இந்த ஜோ நிஜத்தில் தேவதையே! இயல்பில் காதல் எதிர் தரப்பை/பாலினத்தை மட்டுமே விரும்புகிறது. அதற்கு தடையாக சாதிய கட்டுப்பாடு உள்ளது.
பரியன் ஜோ-வின் அழைப்பை ஏற்று குடும்பத்தின் திருமண நிகழ்வுக்கு வந்ததும் அவன் சாதிய இறுக்கம்/வெறிமிகு மனிதர்களினால் துன்புறுத்தப்பட்டதும் அறியாதவள். தன்னுடைய அப்பாவிற்கு பரியனை பற்றி அறிமுகம் செய்தது மட்டுமின்றி அவர் தன் உறவுக்காரனோடு வெறுப்பு நிலையில் நித்தம் அவர்கள் சந்தித்து கொள்கிறார்கள் என்பதை விளக்கியும் தன்னுடைய தகப்பன் இந்த நிலைக்கு காரணம் இது தான் என்று வெளிப்படையாக கூறி இருந்தால் ஒருவேளை வெள்ளந்தியான ஜோ தன் இயல்பை/ நிலையை அறிந்து ஆதிக்கம் மிகுந்த இந்த மக்களுக்கிடையேயான வெறுப்பு நிலைக்கு எதிராக தன்னை மாற்றி களமாட தயார் நிலைக்கு வந்திருப்பாளா? ஆனால், அப்படியெல்லாம் நிகழ இந்த சமூகம் ஜோதி மஹாலெட்சுமிக்கு கற்று தருவதும் இல்லை, அதற்கான வாய்ப்பை மட்டுப்படுத்தி முடக்கி வைத்து வாய்மூடி இருக்கவே செய்கிறது என்பது நிதர்சனம்.
வாய் பூட்டப்பட்ட ஜோதி பரியன் மீது வைத்துள்ள அளப்பறிய காதலை இறுதியாக மருத்துவமனையில் தன்னுடைய மாமனாரை (சாத்தியமிருந்தால்) சந்திக்க வந்த போது இத்தனைக்கும் காரணம் நானாக இருப்பேனோ என்று அறியாமல் அவளுக்கே உரிய அழகிய புன்முறுவல் கொண்ட மனநிலையோடு மஹாலெட்சுமி தன் பரியனின் முகம் பார்த்து கதைக்க உள்மனதில் அடக்கி வைக்கப்பட்ட காதலை கண்ணீரும் கமலையுமாக கொட்டி தீர்த்தாள். கள்ளங்கபடமற்ற தேவதைகள் இவர்களே!
எதிர்கால வாழ்வில் அவள் சட்டம் பயின்று வழக்குரைஞராக தன்னை வேறொரு பரிமாணத்துக்கு எடுத்து சென்றிருப்பாள். பல பெண்களின் வாழ்வியலில் தன்னையும் ஒரு உதாரணமாக கொண்டு வாழ்ந்திருப்பாள்.
ஜோதி-ன் வாழ்க்கை எந்த பரியன் சாதிய கும்பலால் அவமானப்படுத்தப்பட்டு துன்புறுத்த பட்டானோ அதே போன்று வேறு யாரும் அச்சுறுத்தலுக்கு ஆட்பட கூடாது என்று நீதிபதிகள் முன்பு பல பல கேள்விகளோடு நிற்பாள் என்று நாம் எதிர்பார்க்கையில் மீண்டும் மாமன்னன் திரைக்கதை வழியாக தன்னை இணைத்து விவாதத்திற்கு வருகிறாள்..... ஜோ.
பரியன் வேறொரு சாதியை சார்ந்தவன் என்கிற காரணத்தாலே தொடர்ந்து பலவகையான அழுத்தங்களையும் நெருக்கடிகளையும் சந்தித்தான். இதற்கு காரணம் ஜோதி மகாலெட்சுமி என்று கூறிவிட முடியாது. இயற்கையின் அடிப்படையில் ஒரு பாலினம் எதிர் பாலினம் மீது ஈர்ப்பு கொண்டு தன்னை அடைய விரும்பும். அது போன்றே பரியனின் மீதும் ஜோ அன்பை வைத்தாள். இந்நிலையில் ஜோதி தொடர்ந்து தனக்கு பின்னால் நிகழ்கின்ற கொடுமைகளை காண இயலாதவாறு பரியன் மீது நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைகளுக்கு தன்னுடைய காதலே! என்பதறியாமல் பரியனை பாதுகாக்க முடியாமல் தன்னிலை அறிந்து அழுது தவிக்கிறாள்.
திருமணத்திற்கு முன்/பின் என்று பெண்களின் வாழ்க்கையை பிரிக்கலாம். அப்படி பெண்களின் வாழ்க்கையை புரிந்து கொள்ள முடியாது என்பதற்கு ஜோதி போன்ற பெண்களின் கதாப்பாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத இடமிருக்கிறது.
இந்நிலையில் அந்த ஜோ என்னவாக ஆகியிருப்பாள் என்ற சிந்தனையில் இருக்கும்போது அவள் மீண்டும் காட்சிப்படுத்தப்படுகிறாள் மாமன்னனில்....
ஏற்கனவே மேற்சொன்னது போன்று ஆதிக்கசாதி பெண்களுக்கு வாழ்க்கை மறுவாழ்வு செய்து கொடுக்கப்படுகிறது.
பரியனை தன் உயிர்மூச்சாக எண்ணிய ஜோ வாழ்க்கைச் சூழலில், பரியனை மணமுடிக்காது தனது பின்னணி/சாதியை சார்ந்த ரத்னவேலு எனும் சாதி ஆதிக்க மனநிலை கொண்டவனுக்கு மணமுடித்து கொடுக்கப்படுகிறாள். இயல்பிலேயே தைரியமான குணம் கொண்டவள். இதற்கு உதாரணமாக பரியேறும் பெருமாள் திரைக்கதையில் தனது கல்லூரியில் பயிலும் மூத்த மாணவர்களால் துன்புறுத்துதல்/ மிரட்டுதல், சொன்னதை செய்ய வைக்க வரும்போது தன்னை வற்புறுத்தி எதிர்ப்பு தெரிவித்ததன் மூலம் அறிய முடிகிறது.
பரியனை இழந்தது முதல் ஜோ மௌனமாக்கப்படுகிறாள் அல்லது மௌனமாக்கப்பட்டாள் என்று பொருள் கொள்ளலாம். ரத்னவேலுவை மணமுடித்த பின்னரும் அதே பரியன் அதிவீரனாக தன்னெதிரில் வருகிறான். ரத்னவேலுவை எதிர்க்கிறான். சரிக்கு சமமாக சண்டை செய்ய காத்திருக்கிறான். அதிவீரன் தனது அப்பாவின் தன்மானத்துக்காக சமர் புரிகிறான்.
வறட்டு கௌரவத்தை காப்பதற்கு கோபம் கொண்டு அதிவீரனை துப்பாக்கியால் கொள்ளவும் துணிகிறான். அப்போது ஜோ அவனை அதிலிருந்து திசைமாற்றுகிறாள் தனது அன்பால் முத்தமிட்டு பரியனை/அதிவீரனை காக்கிறாள்.
இப்போது தான் ஜோதி மகாலெட்சுமி சாதியின் கொடூரத்தை அருகிலிருந்து காண்கிறாள். உள்ளுக்குள் குமுறுகிறாள். ரத்னவேலுவின் அம்மா இவளை ஆற்றுப்படுத்துகிறாள். சமாதானம் ஆகிறாள். இது தான் இனி வாழ்க்கை என்று உணர்ந்து கடக்க நினைக்கிறாள்.
ஜோ வெருப்பு, விருப்பம் இன்றி எதிர்வரும் தேர்தலில் வேட்பாளராக களம் காண்கிறாள். வெற்றியும் பெறுகிறாள். மௌனமாகவே அனைத்தையும் ஏற்றுக் கொள்கிறாள்.
அனைத்தையும் ஏற்றுக் கொள்ளும் பக்குவம்/மனநிலை பரியனை விட்டு ரத்னவேலுவோடு மணமுடிக்கப்பட்ட நாளில் இருந்து அவள் இன்ப துன்பம் என யாவும் இப்படி தான் என்றுணர்ந்து அதற்கு தன்னை பழக்கப்படுத்தி கொண்டாள்.
இங்கிருந்தே அவள் அதிவீரனின் கோபத்திற்கு பரியனின் நிலை எவ்வாறெல்லாம் இருந்து இருக்கும் என்பது வரை எண்ணி வேதனை அடைகிறாள். பரியன்கள் துன்புறுத்தப்படுவதும் அதற்காக அன்று பொறுமை காத்ததும், இன்று எதிர் நடவடிக்கையில் இறங்கியதும் சரி என்றே எண்ணுகிறாள் ஜோ மௌனமாக.....
காதலுக்காக மட்டும் ஒரு பெண் கதாபாத்திரம் படைக்கப்படுவதில்லை. அதன் வழியே தனது தர்க்கத்தையும் வாதத்தையும் கேள்விக்குள்ளாக்க முடியும் என்ற வகையிலும் கதாப்பாத்திரம் படைக்கப்படும் என்பதை இயக்குனர் மாரிசெல்வராஜ் தனது திரைக்கதை மூலம் நிரூபித்துள்ளார்.


