இயல்புகளைக் காதலிப்போம்.! - கவிதை

Narumpunal
0

அந்த ஓடைக்கரையின் 

தெளிவில்லாத நீரில் 

எதையோ துளாவிக்கொண்டு இருந்தாய்!

காற்றின் கமகம வாசத்தால் 

நீயென்று அறிந்தேன்!

உன் இரு சிறகுகளும் சோர்ந்து 

தரையில் பரவிக் கிடந்தன!

சிட்டுக்குருவிகள் அதில்

 சிக்கெடுத்துக் கூச்சலிட்டன!

தரை கவிழ்ந்த உன் தலை 

நிமிராமல் இருந்ததால் 

அந்த குரங்குக்கூட்டம் 

எதையோ யூகித்துக்கொண்டு 

ஊழையிட்டுக் குதித்தன!

தென்றலினால் கூந்தலுக்கு 

திரவியம் தெளித்த மரங்களும் கூட 

மயான அமைதியோடு மயங்கி நின்றன. 

இந்த வனம் ஒருபோதும் 

இப்படி இருந்ததில்லை!

உன் கொலுசொலி கேட்காமல் 

நதிகளும் ஜதி மெட்டுக்களின் சப்தத்தை 

தற்காலிகத் தடை செய்தன!

நிலவொளியையும் உன் 

கனத்த மௌனம் கவ்விக்கொண்டது! 

அது ஏனென்று கேட்டும் 

நீ பதில்தராததால்

அடிவானம் தன் முகத்தைக் 

கறுத்துக்கொண்டது!

ராக்காலம் பூத்திடும் 

முல்லை மலர்கள் 

ஏனோ மொட்டுகளாக 

முடங்கி தயங்கி நிற்கின்றன.

நாளையின் பிறப்பில் 

தன் பிறப்பைக் கொண்டாடக் 

காத்திருந்த விதைகள் 

நிகழ்ச்சிகளை ஒத்திவைத்துவிட்டு 

தூங்கிவிட யோசிக்கின்றன!

முயல்கள் நடந்து திரிவதை 

முதன்முறை காடு கண்டது!

படுத்த இடத்திலிருந்து 

அந்த யானை 

எழுந்து நீர் அருந்த மனமின்றி 

மண்ணோடு புரள்கிறது! 

புரள்கின்ற யானையின் எடை 

தாங்காமல் கத்திக் கூச்சலிடும் 

கோரைப்புற்கள் 

கோபத்தைக்கூட மறந்திருந்தன!

மான் ஒன்றை துரத்தி வந்த 

கரும்புலி ஒன்று 

வனத்தின் வழக்கமில்லாத 

வடிவத்தைக்கண்டு 

செயலற்று நிற்கிறது!

ஓடி வந்த மானின் 

அருகில் சென்று 

'என்னாச்சு' என்று 

விசாரிப்புகளைத் 

தொடக்கி வைக்கிறது வன்புலி!

"விடியலில் விண்வெளிக்கு 

சென்றுவிடுவாய்! 

அதன்முன் இந்த அழகுவனத்தின் 

அடையாளங்களை அழித்துவிடாதே!

அவிழ்த்து வை மனதை!

முதலில் அந்த 

மேல்நூலாடையை சரிசெய்! " 

என்றவாறே அதட்டலுடன் 

அருகில் வந்தாள் மயிலரசி!

உன் நாடியைப்பிடித்து 

முகத்தை உயர்த்தினாள்! 

அப்போதுதான் 

எல்லோரும் அறிந்தோம்!

கரைபுரளும் கண்ணீருடன் 

இருந்த உன் முகத்தை!

முகத்தின் கண்ணீர் 

தோள் சிந்தி, கைவந்து 

விரல்வழி வழிந்து 

ஓடைவிழ மீன்களும் 

மூச்சுத்திணறியதைப் பார்த்தேன்!

மயிலரசியின் தேறுதல் 

வார்த்தைகள் 

உன்னைத் தேற்றியதாக 

தெரியவில்லை!

உன் தேடல் நான் 

என்பதை அறிவேன்! 

தேறுதல் என் 

அன்பென்று அறிவேன்!

நேற்றை நாளின் சிறுசண்டைக்கு 

நீ இத்தனை விசனப்படுவாய் 

என நான் நினைக்கவில்லை!

உன் வான்மிதக்கும் வெள்ளை உடையும், 

உயரப்பறக்கும் சிறகுகளும் 

என்னில் சிறுமைதரும் என்பதை 

அறியாததே இதன் காரணம்!

மானுடனோடு காதல்கொண்டால் 

தேவதைகளுக்கும் சிரமங்களுண்டு! 

என் நேற்றைய உரைகளை மறந்துவிடு! 

சமநிலைக்காக நீ 

உன்னை மாற்ற வேண்டாம்! 

எனக்காக எதையும் இழக்காதே!

ஆகாயமெங்கும் அளவளாவித்திரிந்த 

உன் அழகிய சிறகுகளையும், 

பஞ்சுபொத்தி மேகங்களின் இழைபறித்து 

இழைத்தெடுத்த வெள்ளை உடையும், 

உள்ளத்தை உருக்கிப்போடும் 

உன் உருவினையும், 

கொழுவிக் கொக்கியிட்டு 

மனதைக் கொழுத்திக் 

குதூகலித்த குருகுரு கண்களையும் 

கண்டுதானே மையல் கொண்டேன்!

நீ உன் இயல்புகளோடு இருப்பதையே 

இன்னமும் விரும்புகிறேன்! 

எனக்கு சிறகு வந்தாலோ! 

என் கருநிறம் வெண்ணிறம் ஆனாலோ!

உனக்கு சிறகு போனாலோ!

உன் வெண்ணிறம் என்நிறம் ஆனாலோ!

அது முழுதின்றி  முரணாகிப் போய்விடலாம்! 

உன் கடவுளை நீ வணங்கு!

நீ நீயாக இருப்பதற்கு நான் தடையில்லை! 

இது சத்தியம்! 

ஆனால் என்னை பணிக்காதே! 

நம் இயல்புகளைக் காதலித்தோம்! 

காதலிப்போம்! என்னாளும்! 

அதோ அந்தி வானில் 

காட்டின் காவல்காரன் 

சிவந்து சினந்து எழுகிறான்! 

என் மனதோடு நான் சொல்வது 

உன் செவி சேர்ந்திருக்கும் என்ற 

நம்பிக்கையில் செல்கிறேன்! 

அழாதே என் கண்மணியே!

போகும்முன் வனத்திற்கு உயிரூட்டிப்போ!

நாளை வா! 

ஆரத்தழுவிப் பேசலாம்! அதுவரைக்காதலுடன்!

*அடச்சீ நாய! எந்திரி...

#ஏம்மா! தண்ணி ஊத்திதான் எழுப்புவியோ!

Tags

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!